‘உறுதிகொள்’, ‘வீராபுரம்’, ‘கபாலி டாக்கீஸ்’, ‘தேடு’, ‘முதல் முத்தமே கடைசி முத்தம்’, ‘நான் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்தவர், மேக்னா ஹெலன். தற்போது அவர் நடித்துள்ள படம், ‘இந்த கிரைம் தப்பில்ல’. மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார். பாண்டி கமல், ஆடுகளம் நரேன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேஸி கோபால், காயத்ரி நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. பரிமளவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.எம்.எம்.கார்த்திகேயன் இசை அமைத்துள்ளார். தேவகுமார் இயக்கியுள்ளார்.
மேக்னா ஹெலன் கூறுகையில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. படத்தில் என் தங்கை அதுபோன்ற விஷயத்தில் பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு நீதி கேட்டு சென்னைக்கு வருகிறேன். அங்கு இப்படிப்பட்ட குற்றவாளிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ஒருவரை தேடிச்சென்று உதவி கேட்கிறேன். அந்த இடத்தில் ஹீரோவை சந்திக்கிறேன். என் தங்கையின் பிரச்னைக்கு நீதி கிடைத்ததா என்பது கதை. இப்படம் மிகவும் மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ளது’ என்றார்.