டார்க் காமெடி ஆக்ஷன் படமாக அமேசான் பிரைம் வீடியோவில் இது நேரடியாக வெளியாகியுள்ளது. பாரீசில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக இருக்கிறார், ராம்சி பெடியா. அவரது தம்பி பப்லிட்டோ ஒரு யூடியூப் பிரபலம். ஒருநாள் திடீரென்று சில மர்ம ஆசாமிகள் பப்லிட்டோவைக் கடத்தி, கொலம்பியாவில் இருக்கும் மெட்டலின் நகருக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்குள்ள பிரபல தாதா ரெய்மண்ட் குரூஸ் தன் தம்பியைக் கடத்தியதாக நினைக்கும் ராம்சி, தனது நண்பன் பிராங்க்குடன் மெட்டலின் நகருக்குச் சென்று, தாதா ரெய்மண்டின் மகனைக் கடத்துகிறார். ஆனால், உண்மையில் தம்பியைக் கடத்தியது அவரது ரசிகர்கள்.
அவருக்கு சில நாட்கள் விருந்து கொடுத்து மகிழ்விக்க இவ்வாறு செய்திருக்கின்றனர். பிறகு ரெய்மெண்ட் அவர்களை விரட்டுவதும், ராம்சி தப்பிப்பதும் என்று, முழுநீள காமெடி சேசிங்காக மாறுகிறது படம். பரபரப்பான ஒரு ஆக்ஷன் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட காமெடி படம் இது. ராம்சி பெடியா, பிராங்க், ரெய்மண்ட் ஆகியோருடன் குள்ள நடிகர் அனுர் துபாலியும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால், குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு அடல்ட் விஷயங்கள் இருக்கிறது.
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரராக வரும் அவர், ராம்சி பெடியா டீமுக்கு சில ஆலோசனைகளையும், ஆயுதங்களையும் கொடுத்து வழிநடத்துகிறார். ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் சிம்பிளாக நடித்துள்ளார். லாஜிக் பார்க்காமல் ரசித்துச் சிரிக்க வேண்டிய படம்.