‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடர், டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு பாக்யராஜ், ஜனனி, ஆஷ்னா சவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். கோடீஸ்வரர் முகேன் ராவ்வுக்கு மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. மனிதர்கள் யாராவது அவரைத் தொட்டால் அலர்ஜியாகி உடம்பு முழுக்க அரிப்பு ஏற்படும்.
இதன் காரணமாக அவர் வீட்டில் தனிமையில் இருந்தபடி பிசினஸை கவனிக்கிறார். இந்த நேரத்தில் சாந்தனு பாக்யராஜ் தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து, மனிதர்களுக்கு உதவும் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு தனது முன்னாள் காதலி ஹன்சிகா மோத்வானியின் உருவத்தைக் கொடுக்கிறார். அந்த ரோபோ பற்றி கேள்விப்படும் முகேன் ராவ், அதை சாந்தனு பாக்யராஜிடம் இருந்து வாங்க பெருந்தொகையைக் கொடுக்கிறார். ரோபோ தயாரிப்புப் பணி இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டு, உடனே அந்த ரோபோ செயல்படாமல் போகிறது.
ஆனால், சொன்ன தேதியில் முகேன் ராவ்வுக்கு ரோபோ கொடுக்க வேண்டும் என்பதால், சாந்தனு பாக்யராஜ் தனது முன்னாள் காதலி ஹன்சிகா மோத்வானியைச் சந்தித்து, ஒரிஜினல் ரோபோ தயாராகும் வரை ரோபோவாக நடிக்கும்படி கெஞ்சிக் கேட்கிறார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டு ரோபோவாக மாறி முகேன் ராவ் வீட்டுக்குச் செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது முழுநீள காமெடி கலாட்டா. வளமான கற்பனை, வறட்சியான காமெடி என்பதுதான் இத்தொடரின் ஒன்லைன் விமர்சனம். மேடை நாடகம் போன்ற காட்சி அமைப்புகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு ஆகியவற்றால் தொடர் தடுமாறுகிறது.
வழக்கம்போல் மெழுகு பொம்மையாக ஹன்சிகா மோத்வானி வருகிறார் என்றாலும், இதில் ரோபோவாக வரும் அவர் செய்யும் சில சேட்டைகளைப் பார்க்கும்போது, ஒரு ஹீரோயினை இப்படியா நடிக்க வைப்பது என்று சிரிப்பு வருகிறது. ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்களுடன், மொத்தம் 9 எபிசோடுகளாக வெளியாகியுள்ளது.