சென்னை: ‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஒய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் புதிய படத்தை இயக்குகிறார். தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து மாதவன் கூறுகையில், ‘சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம்எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது.
‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு ஒய்நாட் உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார். நயன்தாரா கூறுகையில், ‘சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகும் படங்கள் சிறந்த திறமைகள், தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக திகழ்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பலரிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை’ என்றார். இந்த படத்துக்காக மாதவன், சித்தார்த்தை விட அதிகமாக நயன்தாராவுக்கு சம்பளம் தரப்பட்டுள்ளது. அவர் ₹10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.