சென்னை: எஸ்ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்ஆர். ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராகினி திவேதி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக போஜ்புரி மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள ஆர்த்தி நடிக்க, இரண்டாவது ஹீரோவாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. அவினாஷ் கவாஸ்கர் இப்படத்துக்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் மாதப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கதைப்படி, ஹீரோயினுக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள்.