ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பத்து தல’. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு ஃபரூக் ஜே. பாஷா. கன்னடத்தில் நர்தன் இயக்கத்தில் ஷிவ்ராஜ் குமார், மற்றும் ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்.
திடீரென காணாமல் போகும் முதலமைச்சர் அருண்மொழி(சந்தோஷ் பிரதாப்). அதனைத் தொடர்ந்து நடக்கும் அரசியல் போட்டி. இதற்கிடையில் யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பெரும்புள்ளியாகவும், தாதாவாகவும் ஏ.ஜி.ஆர் (எ) ஏ.ஜி.ராவணன்(சிலம்பரசன்). அவருடைய அடியாள் குழுவில் வந்து சேர்கிறார் குணா(கௌதம் கார்த்திக்). இக்காட்டான சூழலில் ஏ.ஜி.ஆர் உயிரைக் காப்பாற்றுகிறார் குணா.
இதனால் ஏ.ஜி.ஆருக்கு கிட்டத்தட்ட வலதுகையாக மாறிப்போகிறார். ஆனால் குணா காணாமல் போன முதலமைச்சருக்கு என்ன ஆனது, ஏ.ஜி.ஆர் என்ன செய்கிறார் என கண்டறிவதற்காக வந்திருக்கும் அண்டர் கவர் போலீஸ் சக்திவேல்(கௌதம் கார்த்திக்). முதலமைச்சர் கிடைத்தாரா? யார் இந்த ஏ.ஜி.ஆர் அவருக்கு என்ன பவர் என்பதற்கான விடைதான் கிளைமாக்ஸ்.
ஏ.ஜி.ஆராக எஸ்.டி.ஆர்… ஸ்டைல், லுக், நடிப்பு, பாடி லாங்வேஜ் என பழைய பன்னீர்செல்வம் மீண்டும் கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. கொடுத்தக் கேரக்டருக்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ செய்திருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகளிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், என கௌதம் கார்த்திக் நடிப்பில் பக்குவப்பட்ட நிலை தெரிகிறது. குறிப்பாக அவர் உயரத்திற்கு சண்டைக் காட்சிகளில் இன்னும் சிறப்பாகவே தோன்றுகிறார்.
கௌதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லே, பிரியா பவானி ஷங்கர் உட்பட அத்தனை பேருக்கும் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருந்தாலும். இன்னும் பாத்திரப் படைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக டீஜே படத்தில் இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கலையரசன் பாத்திரமும் அப்படித்தான் சட்டென வந்து சென்றுவிடுகிறார்.
’இங்கே நல்லது செய்யக் கூட கெட்டவன் முகம் தேவைப்படுது’‘ மண்ணை ஆள்றவனுக்குத்தான் எல்லை, மண்ணை அள்றவனுக்கு இல்ல’ போன்ற வசனங்கள் ஆங்காங்கே பளிச் ரகம்.
படத்தின் மாஸ் காட்சிகளில் பக்கபலமாக நிற்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி. குறிப்பாக ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தீம் இசை பயன்பாடு அருமை. ’அக்கறையில நிக்கிறவன…’, ‘ராவடி…’, ‘நினைவிருக்கா…’ பாடல்கள் ரஹ்மான் மேஜிக்காகக் கடக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஃபரூக் ஜே. பாஷாவின் ஒளிப்பதிவு அருமை.
ஒபெலி என்.கிருஷ்ணா தமிழுக்கு திரைக்கதையை மாற்றம் செய்யும் அளவிற்கு சுதந்திரம் இருக்கும் தருவாயில் இன்னும் ஆழமான நம் அரசியலுக்கு அருகாமையிலான பல விஷயங்களை சேர்த்திருக்கலாம். மேலும் சிம்பு என்பதால் மண் அள்ளினாலும் மாஸாகக் காட்டுவேன் என்பதும் அதற்கு நியாயம் கற்பிப்பதும் தவறான எடுத்துக்காட்டாகவே புலப்படுகின்றன. சிம்பு ரசிகர்களுக்கேனும் திருப்தி தரும் விதமாக இன்னும் அவரின் பாத்திரப் படைப்பை ஆழமாக்கியிருக்கலாம். எனினும் வேஷ்டி சட்டை, சால்ட் &பெப்பர் லுக் என சிம்பு கச்சிதம். குதிரையில் சீறிப்பாய்ந்து எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் நிச்சயம் சிம்பு ரசிகர்கள் வைப்ரேஷன் மோடுக்கு மாறுவார்கள்.
மொத்தத்தில் ஒவ்வொரு நடிகருமே தன்னுடைய 40களின் ஆரம்பத்தில் சில முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்வு செய்து அடுத்தக் கட்டத்துக்குப் பயணிப்பர். அப்படம் மாஸ் ஹிட்டானாலும் சரி, வசூலில் தடுமாறினாலும் சரி அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். அப்படி சிம்புவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் படமாக ‘பத்து தல’ முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாறியிருக்கிறது.