சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரும். அந்த வகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படங்கள் வெளிவருகிறது. இந்த படங்களுடன் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள ‘மிஷன்: சேப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படமும் வெளியாகிறது. இதனை தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இந்த படத்தை மதராஸப்பட்டினம், சைவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இயக்கியிருக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இந்த படத்தின் கதை லண்டனில் நடக்கிறது. முழு படப்பிடிப்பும் லண்டனில் நடந்தது. லண்டன் சிறைச்சாலை ஷெட் அமைத்து அந்த பகுதி படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடந்தது. ரஜினியுடன் ‘2.ஓ’ படத்தில் நடித்த எமி ஜாக்சன் 5 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் லண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். எமி ஜாக்சனுடன் நிமிஷா சஜயன், அபி ஹசன் மற்றும் பல ஆங்கில நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.