ஐதராபாத்: திரைக்கு வந்த ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ், ஒரு படத்தில் நடிக்க 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஒட்டுமொத்த திரையுலகிலும் அவரது மார்க்கெட் உச்சநிலையில் இருக்கிறது. அவரை வைத்து 500 கோடி மற்றும் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமான படம் உருவாக்கி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பிரபாசுக்கு தீவிர ரசிகர், ரசிகைகள் இருப்பதால், அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படங்களாக மாறியுள்ளன. மேலும், உலகம் முழுவதும் அவரது படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிலையில், திரைப்படங்களில் நடித்து பிரபாஸ் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து, பல நாடுகளில் அசையா சொத்துகள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி நாட்டில் பல கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா வாங்கியுள்ள அவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜெட் விமானத்தில் தனது நண்பர்களுடன் இத்தாலிக்குச் சென்று, அந்த சொகுசு பங்களாவில் ஓய்வெடுக்கிறார். தவிர, இந்த பங்களாவை இத்தாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இத்தாலியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும், இதன்மூலம் பிரபாசுக்கு மாத வாடகையாக 40 லட்சம் ரூபாய் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
68