லண்டன்: முன்னாள் உலக அழகியும், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தனது முகத்தில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ என்ற ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதில் ஜான் சேனா, இட்ரிஸ் எல்பா நடிக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள போட்டோவில் காணப்படும் ரத்தக்காயங்கள் குறித்து கூறுகையில், ‘கடந்த சில வருடங்களாகவே படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட காயங்களை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார்.
‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ காமெடியுடன் கூடிய ஆக்ஷன் படம் என்பதால், சண்டைக் காட்சியில் நடித்தபோது பிரியங்கா சோப்ராவுக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கு முன்பு ‘சிட்டாடல்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, 80 சதவீத சண்டைக் காட்சிகளில் அவரே நடித்திருந்தார். இதுகுறித்து அப்போது பேசிய பிரியங்கா சோப்ரா, ‘80 சதவீத சண்டைக் காட்சிகளில் நானே துணிச்சலுடன் நடித்தேன். இதற்குக் காரணம், நான் என் உடலையும், உள்ளுணர்வையும் நம்பியிருந்தேன். அப்போது நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.