பெர்லின் கடந்த 2021ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற பெயரில் உருவாகிறது. சுகுமார் இயக்க, மீண்டும் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் திரையிடப்படுகிறது. இதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் பெர்லின் சென்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜூன், ‘ரசிகர்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3வது பாகத்தை எதிர்பார்க்கலாம். அதன் அடுத்தடுத்த சீக்வல்களை உருவாக்க நானும், சுகுமாரும் விரும்புகிறோம். மேலும், அதற்கான அற்புதமான ஐடியாக்கள் எங்களிடம் இருக்கின்றன. ‘புஷ்பா’ 2வது பாகம், முதல் பாகத்தை விட மிக வித்தியாசமாகவும், புதிய அனுபவமாகவும் இருக்கும். காரணம், உள்ளூரில் இருந்த கதைக்களம் தற்போது இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது. ‘புஷ்பா’ முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கேரக்டரில் நடித்த பஹத் பாசில், 2வது பாகத்தில் புஷ்பாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். மேலும், இருவருக்குமான மோதல் மிகப்பெரிய அளவில் இருக்கும்’ என்றார்.