கோவா: முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி காதல் திருமணம் இன்று தெற்கு கோவா ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் மிகப் பிரமாண்டமான முறையில் நடக்கிறது. நேற்று முதல் பிரபல நட்சத்திரங்கள் பலர் கோவாவுக்கு விமானத்தில் பறந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு 5 நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முன்தினம் இரவு முதல் ஆரம்பித்து, தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆடல், பாடல், சங்கீதம் என்று விமரிசையான கொண்டாட்டத்துக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதேவேளையில், சுற்றுப்புற சூழல் பாதிக்காத வகையில் திருமண பத்திரிகைகளை டிஜிட்டலில் மட்டும் அனுப்பி வைத்திருந்தனர்.
திருமண விழாவில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்ப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோல், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகளை வழங்கும் வகையில் சுகர் பிரீ, ஆயில் பிரீ, ஃபாயில் பிரீ ஆகிய உணவுகள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் தனிப்பட்ட முறையில் டயட் பிளான்கள் இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, திருமண விருந்து நிகழ்ச்சியில் அவரவருக்கேற்ற ஆரோக்கிய உணவு வகைகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திருமணத்தில் ஆங்காங்கே செல்ஃபி, செல்போனில் போட்டோக்கள் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும், திருமண நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டோகிராபர்களுக்கு மட்டுமே போட்டோ எடுக்க அனுமதி என்றும், விழா ஏற்பாட்டாளர்களிடம் திருமணம் நடத்தும் இருவீட்டாரும் கறாராக சொல்லிவிட்டனர். பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் திருமண விழாவில் கலந்துகொள்வதால், அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணம் முடிந்த பிறகு ரகுல் பிரீத் சிங், ஜாக்கி பக்னானி இருவரும் மரக்கன்றுகள் நடுகின்றனர். பிறகு அவர்கள் ஹனிமூன் பயணமாக எந்த நாட்டுக்கு செல்கின்றனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.