ஒரே ஜாதிக்குள் நடக்கும் பங்காளி சண்டைகளும், அதன் பேரில் நடத்தப்படும் கொலைகளும் ஓடும் ரத்த ஆறும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பங்காளி பகையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். மதுரை அருகே வெயில் காயும் கிராமம் ஒன்றில் ஒரே ஜாதியை சேர்ந்த கண்ணுசேர்வை(விஜயகுமார்) குடும்பத்துக்கும், பூதனன் சேர்வை(விஜய் சத்யா) குடும்பத்துக்கும் தீராப் பகை. பணவசதி படைத்த பூதனன் சேர்வைக்கு நிகராக கண்ணு சேர்வையும் வளர முயற்சிக்கும்போது ஆரம்பிக்கும் பகை, தலைமுறை தாண்டி தொடர்கிறது.
அதிலும் கண்ணு சேர்வையின் மகன் சேங்கை மாறன்(சந்தோஷ் நம்பிராஜன்) சரியான சண்டைக்கோழி. அடிதடி வெத்துகுட்டு அவனுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. இந்த பக்கமும், அந்த பக்கமும் சில கொலைகள், வழக்குகள் என்று போகும் வாழ்க்கையின் இடையில் மலர்கிறது சேங்கை மாறனின் காதல். ஜெயிலும், பெயிலுமாய் அலைகிற சேங்கை மாறனை உயிராக காதலிக்கிறாள் தொட்டிச்சி (ரவீனா ரவி). பல ரத்தம் பார்த்த பிறகும் பகை முடிகிறதா? பகைக்கு இடையில் மலர்ந்த காதல் நிறைவேறுகிறதா? என்பதுதான் படத்தின் கதை.
1880களில் நடக்கிற மாதிரியான இந்த கதையில் பயணிக்க அந்த காலகட்டத்துக்கே அழைத்துச் செல்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியனும், டோனி ஜானும். இளையராஜா 80களில் சூப்பர் ஹிட்டான தனது பாடல்களை பொருத்தமான இடத்தில் வைத்து பின்னணியில் தாலாட்டுகிறார். பகை மோதல் காட்சிகளில் மிரட்டவும் செய்கிறார். வயல்வெளி கொலை காட்சிகள், கோயில் திருவிழாக்கள், டீக்கடை அலப்பறைகள், நாடகத்தன்மை இல்லாத நீதிமன்ற காட்சிகள் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. ‘டூலெட்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சந்தோஷ் நம்பிராஜன் கள்ளச்சிரிப்பின் மூலம் காதலையும், கனல் கக்கும் கண்கள் மூலம் பகையையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொட்டிச்சியாகவே வாழ்ந்திருக்கிறார் ரவீனா. ஓரக் கண்ணால் பார்ப்பது, புருவத்தைக் கொண்டே காதல் அம்பு வீசுவது என 80களின் கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கிறார். இரண்டு பங்காளி குடும்பத்தின் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள், கதை முழுக்க பயணிக்கும் மாற்றுத்திறனாளி விசித்திரன் என அனைவருமே அந்தந்த கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள எல்லோருமே ஊர் தலைவரின் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். அப்படியானால் அவரே இரு குடும்பத்தையும் அழைத்து பேசி பகையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே. தொட்டிச்சியின் முடிவுக்கு சொல்லப்படும் காரணத்தில் வலு இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும் ஆண்டிறுதியில் வந்திருக்கும் தரமான படம்.