வடசென்னை இளைஞன் செல்வாவுக்கு (‘உறியடி’ விஜயகுமார்) ஃபுட்பாலில் முன்னணி இடத்துக்கு வந்து, அதன்மூலம் அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது கனவு. அதை நனவாக்க முயற்சிக்கும் பயிற்சியாளர் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்), தாதாக்களின் ஆதிக்கப் போட்டியில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றவர்களில் ஒருவரான அவரது தம்பி ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்), சிறைக்குச் செல்கிறார். இன்னொருவர் கிருபா (சங்கர் தாஸ்), அரசியலில் நன்கு வளர்ந்து கவுன்சிலர் ஆகிறார். சிறையில் இருந்து விடுதலையாகும் ஜோசப், தனக்கு துரோகம் செய்த கிருபாவைப் பழிவாங்க, பெஞ்சமினைக் கொன்றது கிருபாதான் என்று சொல்லி, செல்வாவை அவருக்கு எதிராகத் திருப்புகிறார்.
இதனால், படிப்பு மற்றும் விளையாட்டை விட்டு விலகும் செல்வா, தனது நண்பர்களுடன் சேர்ந்து தனி கேங் உருவாக்கி, கிருபாவுக்கு எதிராக துணிந்து நிற்கிறார். ஜோசப், கிருபா ேமாதலுக்கு இடையே செல்வா தலைமையிலான இளைஞர்கள் என்ன ஆகின்றனர் என்பது மீதி கதை.அடிதடியில் இறங்கி அடியாளாக மாறி, சம்பவம் செய்து தாதாவாகி, அப்படியே அரசியலுக்கு வருவது போன்ற வடசென்னை கதைகள் நிறைய வந்துள்ளன. அதுபோன்ற ஒரு கதை இது. கதையின் நாயகன் விஜயகுமார் துடிப்பும், துணிச்சலுமாய் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ஹீரோயின் மோனிஷா மோகன் மேனன் மீது ஏற்படும் காதல், கவிதையாய் தொடங்கி சீக்கிரமே காணாமல் போகிறது.
மோனிஷா மோகன் மேனன் அழகாக வந்துவிட்டு செல்கிறார். வில்லன்களில் சங்கர் தாஸ் நேரடியாக ேமாதுகிறார். அவினாஷ் ரகுதேவன் பதுங்கி இருந்து பாய்கிறார். இருவருமே நேர்த்தியாக நடித்துள்ளனர். கதையும், கருத்தும் எப்படி இருந்தாலும், சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் இருந்து காட்சியாக்கி இருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ஏ.ரஹ்மத். அதற்கு ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்ேடா பேருதவி செய்துள்ளார். வடசென்னையின் குறுகலான பகுதிகளிலும் முத்திரை பதித்து இருக்கிறது அவரது கேமரா.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதை மற்றும் காட்சிகளின் ஓட்டத்தை தூக்கி நிறுத்துகிறது. இளைஞர்களை தவறாக வழிநடத்தி, அவர்களது எதிர்கால வாழ்க்கையையே நாசம் செய்யும் விஷயம் எல்லா இடத்திலும் நடந்தாலும், திரையுலகம் மட்டும் என்னவோ வடசென்ைனயை கதைக்களமாக வைத்து, தொடர்ந்து அதை வன்முறைக்களமாகவே சித்தரித்து வருகிறது. படம் முழுக்க துரத்தல், சண்ைட, ரத்தம் என்று, டைட்டிலுக்கு ஏற்ப முழுநீள ‘ஃபைட் கிளப்’தான்.