கதையின் நாயகன் ராஜலிங்கத்துக்கு (சையத் மஜீத்) புறா வளர்த்து, அதை பந்தயத்தில் விட்டு, உள்ளூரில் ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், அவரது அம்மா சரஸ்வதிக்கோ (விஜி சேகர்), தன் மகன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை. இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அம்மா பயந்தது போலவே, புறா பந்தயம் ராஜலிங்கத்துக்கு நிறைய எதிரிகளை உருவாக்குகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு என்ன முடிவு என்பது மீதி கதை.
புறா பந்தயம் என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், இந்த பாணியில் வந்திருக்கும் 1001வது கதை இது. ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நாகர்கோயில் வாழ்வியல், இப்படத்தை நன்கு கவனிக்க வைக்கிறது. உள்ளூர் ஸ்லாங், உள்ளுர் லேண்ட்ஸ்கிராப் ஆகியவற்றை வைத்து, அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி புதிய கோணத்தை கையாண்டிருக்கிறார். புறா பந்தயத்துக்கான மோதல் என்ற ஒரே நேர்க்கோட்டில் கதை செல்வதால், நாயகனுக்கு ஷரோனுடன் (மேக்னா ஹெலன்) ஏற்படும் காதல், வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
அம்மாவுக்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தில் தெளிவில்லாமல் போகிறது. வில்லன் வினு லாரன்சின் நடிப்பு செயற்கைத்தனம். அம்மா விஜி சேகரின் ஓவர் ஆக்டிங், எப்போதும் தொண்டை கிழிய கத்தியபடி ஓடிக்கொண்டு இருக்கும் ஹீரோ ஆகியவற்றை சரி செய்திருந்தால், இது கவனிக்கத்தக்க படமாகி இருக்கும். ரமேஷ் பண்ணையாரின் கேரக்டர் எழுதப்பட்ட விதமும், அவரது நடிப்பும் சிறப்பு. ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். குறைகள் இருந்தாலும், புதிய களத்தில் புதியதொரு கதையை சொன்னவிதத்தில், ‘பைரி’ தனித்துவம் பெறுகிறது.