ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்துக்கு தள்ளிப்போயுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் ‘சலார்’. இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, டீனு ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய தாமதமாகி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி இம்மாதம் படம் வெளியாகாது என்றும் நவம்பரில் தீபாவளிக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை படக்குழுவும் உறுதி செய்துள்ளது. அதே சமயம், படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சலாருடன் போட்டி போட விரும்பாமல் பிற தமிழ் படங்கள் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் இருந்தன. இந்நிலையில் சலார் தள்ளிப்போனதால், ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’, சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’, ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ஆகிய படங்கள் வரும் 28ம் தேதி ரிலீசாக இருக்கின்றன.
55