ஐதராபாத்: யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களின் மூலம் பான் இந்தியா இயக்குனராக மாறியுள்ள பிரசாந்த் நீல் தற்போது இயக்கியுள்ள படம், ‘சலார்: பார்ட் 1 – சீஸ்பயர்’. இதில் ஹீரோவாக பிரபாஸ், வில்லனாக பிருத்விராஜ், ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். வரும் 22ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம் குறித்து பிரசாந்த் நீல் கூறியதாவது: திடீரென்று எதிரிகளாக மாறிவிட்ட 2 உயிருக்குயிரான நண்பர்களைப் பற்றிய கதையுடன் ‘சலார்’ உருவாகியுள்ளது. நண்பர்களின் பயணத்தை 2 பாகங்களில் காட்டுகிறோம். ஒரு பாதி கதையை முதல் பாகத்தில் சொல்கிறோம். இதில் நட்பு முக்கிய விஷயமாக சொல்லப்படும். இன்று டிரைலர் வெளியாகிறது. அதில் நாங்கள் உருவாக்கியுள்ள தனி உலகத்தைப் பற்றிய பிரமிப்பு ரசிகர்களுக்கு ஏற்படுவது உறுதி.
‘கே.ஜி.எஃப்’ படங்களின் கதையும், ‘சலார்’ படத்தின் கதையும் வெவ்வேறு களத்தில் உருவாகியுள்ளது. எனவே, இப்படத்தில் இன்னொரு ‘கே.ஜி.எஃபை’ ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம். ‘சலார்’ கதை தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதற்கு தனியான உணர்வும், கேரக்டர்களும் உண்டு. பிரபாஸ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அப்பாவித்தனமும், ஆக்ரோஷமும் கலந்த தனித்துவமான கலவையை அவரிடம் பார்த்து வியந்த நான், அதையெல்லாம் இப்படத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன். கண்டிப்பாக ‘சலார்’ படம் ரசிகர்களுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இதில் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள், பிரபாசின் மாஸ் என்ட்ரி இடம்பெற்றிருந்தது.