சென்னை: பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை வெளியாகும். இந்தப் படம் பற்றி சந்தானம் கூறியதாவது: மற்றொரு பட வேலையாக நான் புதுவையில் இருந்தேன். தயாரிப்பாளர் நவீன் ராஜும், இயக்குநர் பிரசாந்த்ராஜும் அங்கு வந்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஹீரோயின் தான்யா ஹோப், ஒரு பாடலில் குதிரையில் ஏறிச் செல்வது போல் காட்சியை இயக்குனர் படமாக்கினார். தான்யாவுக்கு குதிரையேற்றம் தெரியும். இந்த காட்சியில் சுலபமாக நடித்துவிடுவேன் என அவர் கூறினார். ஆனால் அவர் நினைத்து போல் நடக்கவில்லை. ஒவ்வொரு முறை அவர் ஏறும்போதும் தான்யாவை தள்ளிவிட்டு குதிரை ஓடி விடும். தான்யா அதை செல்லமாக பேசி ரூட்டுக்கு கொண்டு வர பார்த்தார். அந்த குதிரையோ தாய்லாந்து மொழியில் பேசினால் மட்டும் கேட்கும். இதனால் சில மணி நேரம் அவஸ்தைப்பட்டு, பிறகு ஒரு வழியாக அந்த காட்சியை படமாக்கினோம்.