
சென்னை காசிமேடு மீனவ குப்பத்தில் வசிக்கும் வடிவுக்கரசி, தீக்கிரையான காப்பகத்தில் இருந்து உயிர் தப்பிய அநாதை குழந்தைகளான மைக்கேல் தங்கதுரை, அப்சல் ஹமீது, கேப்ரில்லா செல்லஸ், வினுஷா தேவி ஆகியோருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து ஆளாக்குகிறார். மைக்கேல் தங்கதுரையும், அப்சல் ஹமீதும் மீன்பிடி துறைமுகத்தில் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், போதைப்பொருட்களுக்கு அடிமையான அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், கடற்கரையில் நடந்து சென்ற வினுஷா தேவியை துப்பாக்கியால் சுடுகின்றனர்.
சும்மா ஜாலிக்காக ஒரு இளைஞர் செய்த இச்செயல், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது. மருத்துவமனையில் வினுஷா தேவி கோமா ஸ்டேஜூக்குச் சென்று உயிரை விடுகிறார். இதனால் ஆவேசப்பட்டு பழி தீர்க்கப் புறப்படும் மைக்கேல் தங்கதுரை கோஷ்டி, போலீசாரால் அடுக்கடுக்கான சோதனைகளில் சிக்கி சின்னாபின்னம் ஆகின்றனர். நேர்மையான போலீஸ் அனுபமா குமார் அவர்களுக்கு உதவ நினைத்தாலும் முடியவில்லை. பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை.
பண பலம் மற்றும் அதிகார பலம் படைத்தவர்களால், ஏழைகள் இச்சமூகத்தில் எப்படி பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்பது கதை. படத்தை இயல்பாக இயக்கியுள்ள லோகேஷ் குமாருக்கு பாராட்டுகள். வடசென்னை மக்களின் வாழ்வியலை மைக்கேல் தங்கதுரையும், அப்சல் ஹமீதுவும் யதார்த்தமான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.
மைக்கேல் தங்கதுரையின் காதலி கேப்ரில்லா செல்லஸ், அப்சல் ஹமீதுவின் காதலி வினுஷா தேவி ஆகியோர் டி.வி மூலம் பிரபலமானவர்கள் என்றாலும், இப்படத்தில் சினிமாவுக்கே உரிய நடிப்பை வழங்கியுள்ளனர். வடிவுக்கரசியும், கையாலாகாத போலீஸ் அனுபமா குமாரும் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். திவ்யாங்க் ஒளிப்பதிவு மீனவ குப்பத்தையும், கடலையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஜி.பாலசுப்பிரமணியனின் பின்னணி இசை, கதைக்களத்தை கனமாக்கி இருக்கிறது. மெதுவாக நகரும் காட்சிகளை வேகப்படுத்தி, இறுதி முடிவைமாற்றியிருக்கலாம்.