
சின்னச்சின்ன திருட்டு மற்றும் அடிதடி விவகாரங்களில் ஈடுபட்டு, ஜாலியாக வாழ்ந்து வருபவர் நிஷாந்த் ரூஸோ. பைக் திருடிய சம்பவத்தில் போலீசிடம் சிக்கிய அவர், காவல் நிலையத்தில் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கப்படுகிறார். அப்போது மிளகு காட்டில் படுகொலை நடந்ததாக போலீசுக்கு போன் வருகிறது. அங்கு செல்ல போலீசுக்கு வழி தெரியாததால், நிஷாந்த் ரூஸோவை வழிகாட்டச் சொல்லி, போலீஸ் கோடாங்கி வடிவேலுவுடன் அவரை அனுப்புகின்றனர். அப்போது நிஷாந்த் ரூஸோவை, கொலை செய்யப்பட்ட விவேக் பிரசன்னாவின் கையுடன் இணைத்து விலங்கு போட்டு விடுகிறார், கோடாங்கி வடிவேல்.
பிறகு அவர் போலீஸ் அதிகாரி வினோத் சாகருக்கு போன் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தால், விவேக் பிரசன்னாவுடன் நிஷாந்த் ரூஸோ தப்பித்துச் சென்றது தெரிகிறது. நிஷாந்த் ரூஸோவையும், விவேக் பிரசன்னாவையும் போலீஸ் ஒருபுறமும், வில்லன் கோஷ்டி இன்னொருபுறமும் துரத்துகிறது. அடர்ந்த காட்டில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள திசை தெரியாமல் ஓடும்போது, விவேக் பிரசன்னாவைக் கொல்லும்படி அவரது மனைவியும், சினிமா நடிகையுமான காயத்ரி அய்யர் பேரம் பேசுகிறார். விவேக் பிரசன்னாவை நிஷாந்த் ரூஸோ கொன்றாரா? போலீஸ் அவர்களை கைது செய்ததா என்பது மீதி கதை.
நிஷாந்த் ரூஸோ, விவேக் பிரசன்னா இருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். வினோத் சாகர் ஒரே டயலாக்கைப் பேசி வெறுப்பேற்றுகிறார். அதுதான் அவரது கேரக்டர். காயத்ரி அய்யர் வசனங்களை ஒப்பிக்கிறார். திடீரென்று முறைத்து வில்லியாகிறார். அடர்ந்த வனத்தில் நடக்கும் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்த இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ், திரையில் அதை விறுவிறுப்பாகச் சொல்ல தவறிவிட்டார். காடு, மலை, அருவி, இருட்டு என்று, ஒவ்வொரு காட்சியையும் அஸ்வின் நோயல் கேமரா அழகாகப் பதிவு செய்துள்ளது. ரெஞ்சித் உன்னியின் பின்னணி இசை பரவாயில்லை.