சென்னை: வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’. கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரித்துள்ளார்.படத்தை பற்றி மாஸ் ரவி பூபதி கூறும்போது, ‘இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலை சுற்றி படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் நடக்கும் கதையிது. தற்போது சமூக வலைத்தளத்தில் இளம்பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் படமாக்கி இருக்கிறேன். ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சத்துடன் திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.