லாஸ்ஏஞ்சல்ஸ்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான ‘பதான்’ படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக தமிழ் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து முடித்துள்ளார். ‘ஜவான்’ படம் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக ‘டன்கி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் டாப்ஸி மற்றும் விக்கி கெளஷல் ஆகியோர் ஷாருக்கானுடன் நடிக்கின்றனர். அமெரிக்காவில் டன்கி படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் சென்றிருந்தார். அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது விபத்து ஏற்பட்டது. இதில் ஷாருக்கான் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே ஷாருக்கானை படக்குழுவினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அவரது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையறிந்த ரசிகர்கள் பதற்றம் அடைந்து, சமூக வலைத்தளத்தில் ஷாருக்கானுக்காக பிரார்த்தனை செய்யும்படி மக்களை கேட்டு வருகின்றனர்.
40