சென்னை: விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் கதைக்களம் கேஜிஎஃப் தோன்றுவதற்கு முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் வாழ்ந்த, தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றியது. கேரக்டருக்காக எந்த நிலைக்கும் சென்று தன்னை வருத்திக்கொண்டு நடித்து அசத்தும் விக்ரம், இந்த படத்திலும் அதேபோன்ற பாணியை பின்பற்றியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் சமூக அவலங்களை பற்றி பேசும் பா.ரஞ்சித், இந்த படத்திலும் அதை செய்திருக்கிறார். அதனால் தங்கலான் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. முதல் கட்டமாக படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட விலா எலும்பு முறிவால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தங்காலன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ‘என்ன ஒரு பயணம். மிகவும் அற்புதமான சிலருடன் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன், ஒரு நடிகராக இந்த படம் எனக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தையும் கொடுத்துள்ளது. முதல் நாள் ஷூட்டிங்கிற்கும் கடைசி நாளுக்கும் இடையே வெறும் 118 நாட்கள்தான் இருந்ததா? இந்த கனவை ஒவ்வொரு நாளும் நனவாக்கியதற்கு நன்றி ரஞ்சித்’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார். விக்ரமின் இந்த டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
51