ஐதராபாத்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள பான்வேர்ல்டு படம், ‘ஹனு-மேன்’. இப்படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி விஎஃப்எக்ஸ் பணிகள் முடியாததால், படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்திருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘எங்களது ‘ஹனு-மேன்’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இதயத்தை தொட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இப்படத்தை வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறோம். வெண்திரையில் ஹனுமானை அனுபவிக்க புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கிறோம்’ என்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், ஜப்பானீஸ் ஆகிய மொழிகளில் பான்வேர்ல்டு படமாக ‘ஹனு-மேன்’ திரைக்கு வருகிறது. கதையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனை இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹனுமானின் சக்திகளைப் பெற்ற ஹீரோ, அஞ்சனாத்திரிக்காக எப்படிப் போராடுகிறார் என்பது கதை. இப்படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருக்கும். தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக அமிர்தா அய்யர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விநய் ராய், வரலட்சுமி, கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி நடித்துள்ளனர்.
31