ஹாலிவுட்டில் அவ்வப்போது சில புதுமைகளைச் செய்து, தொடர்ந்து ரசிகர்களை ஜாலி மூடிலேயே வைத்திருப்பார்கள். அந்த வகையில் உருவான ஒரு டிரெண்ட்தான், அனைத்து முன்னணி ஹீரோக்களையும் இணைத்து உருவாக்கும் படங்கள். இந்த வரிசையில் வெற்றிபெற்ற படம், ‘எக்ஸ்பெண்டபிள்’. கடந்த 2010ல் முதல் பாகமும், 2012ல் 2ம் பாகமும், 2014ல் 3ம் பாகமும் வெளியானது. அனைத்திலும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் முக்கியமாக இருப்பார். தவிர அர்னால்டு, ஜேசன் சதான், ஜெட்லி, டோல்ப் லுண்ட்கரன், புரூஸ் வில்லிஸ், மெல் கிப்சன், ஹரிசன் போர்டு நடித்திருந்தனர். தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு 4ம் பாகம் வெளியாகியுள்ளது. இதில் சில்வெஸ்டர் ஸ்டாலோனுடன் ஜேசன் சதான் இணைந்து நடித்துள்ளார். அதாவது, இதில் ஜேசன் சதான் ஹீரோ. மற்ற சில ஹீரோக்கள் அவர் அணியில் நடித்துள்ளனர். டோனி ஜா வில்லனாக வருகிறார்.
சிரியாவிலுள்ள ரசாயன ஆலையில் ரகசியமாக ஒரு அணுகுண்டு தயாரித்து வைத்துள்ளனர். அதை டோனி ஜா தலைமையிலான தனியார் ராணுவப் படை கைப்பற்றுகிறது. அதை மீட்கும் பொறுப்பு சில்வெஸ்டர் ஸ்டாலோன் தலைமையிலான அதிரடிப்படைக்கு தரப்படுகிறது. ரசாயன ஆலையை மீட்கும் படையால், அணுகுண்டு கடத்தலை தடுக்க முடியவில்லை. இந்தப் போரில் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் விமானம் ஏவுகணை தாக்குதலால் எரிந்து சாம்பலாகிறது. இதனால், படைக்கு தலைமைப் பொறுப்பு ஏற்கிறார் ஜேசன் சதான். கடத்தப்பட்ட அணுகுண்டு தாய்லாந்து கடலில் நிற்கும் ஒரு பழமையான கப்பலில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்க தனது படையை நேரடியாக அனுப்பி வைத்துவிட்டு, ஜேசன் தனியாக இன்னொரு ரூட்டில் செல்கிறார். இறுதியில் அணுகுண்டை மீட்டார்களா? அழித்தார்களா என்பது மீதி கதை.
இரண்டு வரியில் சொல்லிவிடக்கூடிய கதையான இதை, 104 நிமிடங்கள் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஸ்காட் வாக். கடைசி 30 நிமிடங்கள் இடம்பெறும் கப்பல் கிளைமாக்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது. படம் ஆரம்பித்த 15வது நிமிடத்தில் இறந்துவிடும் சில்வெஸ்டர் ஸ்டாலோன், கடைசி 10 நிமிடங்களில் மீண்டும் வந்து ஆட்டத்தை முடித்து வைக்கிறார். அவர் எப்படி உயிர் பிழைத்து வந்தார் என்பது சஸ்பென்ஸ். ஹீரோவும், ஹீரோயினும் பயங்கரமாக சண்டை போட்டுவிட்டு, அடுத்த நிமிடமே படுக்கையைப் பகிர்ந்து கொள்வார்கள். ராணுவ உயரதிகாரி ஒருவர், கடைசி நேரத்தில் வில்லனாக மாறுவார். இதுபோன்ற வழக்கமான காட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. அணுகுண்டு அடுத்தடுத்த இடத்துக்கு நகர்வது அவர்களுக்கு எப்படி தெரியும்? அந்த இடத்தை எப்படி எளிதில் அடைகின்றனர் என்று, லாஜிக் பற்றி கேட்கக்கூடாது. அதையெல்லாம் தள்ளிவைத்து விட்டால், 104 நிமிடங்களும் பத்தே நிமிடங்களில் கடந்தது போல் இருக்கும். அதிரடி ஆக்ஷன் பிரியர்களுக்கு சுடச்சுட கிடைத்த பிரியாணி இது.