மும்பை: மும்பை திரையரங்குகளில் ‘தி வாக்சின் வார்’ என்ற இந்திப் படத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவதால், இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி வாக்சின் வார்’ என்ற படம் திரைக்கு வந்தது. ஆனால், மும்பையிலுள்ள சில தியேட்டர்களில் இப்படத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. இதுதொடர்பான வீடியோவை விவேக் அக்னிஹோத்ரி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ‘எனது ‘தி வாக்சின் வார்’ படத்துக்கு எதிரான போராட்ட வீடியோ கிடைத்துள்ளது.
மக்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள்? சுகாதாரமாக இருந்தால் ஏன் பயப்பட வேண்டும்? விழிப்புணர்வு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்படம் உருவாகியுள்ளது. நேர்மறையான விஷயங்களே முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படம் கொரோனா வைரஸ் பற்றியது இல்லை. அதற்கு தடுப்பூசி தயாரிப்பது பற்றியது. இப்படத்தின் எந்தப் பகுதியில் உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது? அனைவரையும் ஈர்க்கும் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேள்வி கேட்டுள்ளார். சர்ச்சைக்குரிய சில படங்களை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளதால், இப்போது ‘தி வாக்சின் வார்’ படத்தின் ரிலீசையொட்டி அவருக்கு எதிரான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.