லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்பட பலர் நடித்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற ஹாலிவுட் படம், ‘டைட்டானிக்’. கடந்த 1912ல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் என்ற கப்பலைப் பற்றிய படம் இது. அப்போது ஏற்பட்ட விபத்தில், கப்பலில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1997ல் வெளியான ‘டைட்டானிக்’ படம் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்தின் கிளைமாக்சில் ஒரு மரக்கதவைப் பிடித்தபடி லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் இருவரும் மிதந்து கொண்டிருப்பார்கள். தற்போது அந்த மரக்கதவு ஏலம் விடப்பட்டுள்ளது. அதை 5 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அதோடு, 1980ல் வெளியான ‘தி ஷைனிங்’ படத்தில் இடம்பெற்ற ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி, 1984ல் வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அன்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்பட சில பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், ‘டைட்டானிக்’ படத்தின் மரக்கதவு மட்டுமே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.