சென்னை: டிவிட்டர், இன்ஸ்டாவில் தொடர்ந்து தினமும் ஏதாவது பதிவுகளை போடுவார் ரஹ்மான். ஆனால் கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எந்த பதிவும் வெளியிடாமல் அவர் அமைதி காத்து வருகிறார். இதற்கு காரணம், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிதான் என்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியை கடந்த 10ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை ஈசிஆரில் உள்ள ஒரு அரங்கில் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதைவிட கூடுதலாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிகழ்ச்சிக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரஹ்மானுக்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து மனம் நொந்துபோன ரஹ்மான், நான் பலி ஆடு ஆகிறேன் என வருத்தத்துடன் தெரிவித்தார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். கடந்த 10 நாட்களாக அவர் டிவிட்டர், இன்ஸ்டாவுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25