சென்னை: செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள படம், ‘படிக்காத பக்கங்கள்’. இதில் பிரஜின், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் மரியன், ஆதவ் பாலாஜி, மனோகர் நடித்துள்ளனர். டாலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெஸ்ஸி கிஃப்ட், எஸ்.எஸ்.சாய் தேவ் இணைந்து இசை அமைத்துள்ளனர். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. எஸ் மூவி பார்க், பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில் எம்.செல்வம், முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘திரையுலகில் இது எனக்கு 44வது ஆண்டு. எனக்குப் பிடித்த சில பாடல்களில் ஒன்றாக, இப்படத்தில் எழுதியுள்ள ‘சரக்கு’ என்ற பாடலும் இடம்பெறும். நவீன பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் நான் எழுதியிருக்கும் பாட்டு, முழுக்க முழுக்க மதுவுக்கு விரோதமான பாட்டு. நான் 10 வயதில் இருந்து மதுவுக்கும், போதைக்கும் எதிரானவன். மதுவால், போதையால் எங்கள் ஊரும், உறவுகளும் எவ்வளவு பாதிப்புக்குள்ளானது என்பதை நான் அறிவேன். இதுவரை ஒரு சொட்டு மது கூட நான் குடலில் இறக்கியதில்லை. மதுவை விட மோசமானது புகை. எனவே, இப்பாடலை இந்தப் படத்தில் இடம்பெற வைத்துள்ளதற்காக தமிழ்ச்சமூகம் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது’ என்றார். விழாவில் படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.