ஐதராபாத்: தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ வெங்கடேஷ் நடிக்கிறார். வெங்கடேஷின் 75-வது படமாக சைந்தவ் உருவாகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இதன் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் படங்களில் நடித்து வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மெஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுபோல் தோன்றுகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச் செய்கிறார். பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது.