சென்னை: பழம்பெரும் நடிகை வசந்தா (82), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.40 மணியளவில் காலமானார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் நாடகக்குழுவில் பங்கேற்று நடித்து வந்த வசந்தா, பிறகு சினிமாவில் அறிமுகமானார். 1965ல் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாகவும், ‘கார்த்திகை தீபம்’ படத்தில் எஸ்.ஏ.அசோகன் ஜோடியாகவும் நடித்த அவர், ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும், ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாகவும் நடித்தார். ‘மூன்று முகம்’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வசந்தாவின் மறைவுச்செய்தி அறிந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வசந்தாவின் இறுதிச்சடங்கு நடக்கிறது.
35