ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில், சிறப்புத்தோற்றத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’. தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், வரும் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இத்தகவல் உறுதி செய்யப்படாமலே இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் இத்தகவலை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘ஷாருக்கான், விஜய் இருவரும் ஒரு அதிரடி சண்டைக் காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இக்காட்சி நிச்சயம் இருதரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்’ என்றார். இப்படத்தில் நடித்த விஜய் சம்பளம் வாங்கவில்லை. ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லியுடனான நட்புக்காகவே அவர் சம்பளம் வாங்காமல் நடித்ததாக கூறப்படுகிறது.