
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘பொன்னியின் செல்வன் 2’. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:
உயிரே, உறவே, தமிழே. நான் எந்த மேடைக்கு சென்றாலும் இந்த வார்த்தைகள் மட்டும் மாறாது. அது கீழே உட்கார்ந்து இருக்கும் சிம்புவுக்கும் தெரியும். எங்களை இவ்வளவு காலம் தாங்கிப் பிடிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. என்னிடம் எனது ஷெட்யூல் என்ன என்று கேட்பார்கள். எப்படி இப்படி எல்லாம் வேலை செய்கிறீர்கள் என்றும் விசாரிப்பார்கள். நான் வேலைக்குச் சென்று நீண்ட நாட்களாகி விட்டது. நான் பிடித்ததைச் செய்ய பணம் கொடுக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது நல்ல படம் ெகாடுப்பதுதான் எங்களின் மிகப்பெரிய கடமையாக இருக்கிறது. கல்கியைப் பார்த்து பல எழுத்தாளர்கள் பொறாமைப்பட்டது போல், இப்போது மணிரத்னத்தைப் பார்த்து பல எழுத்தாளர்களும், இயக்குனர்களும் பொறாமைப்படுகிறார்கள்.
நேற்று முன்தினம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் பிரமாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா மூலம் இசை ஒன்றை எனக்கு செய்து காண்பித்தார். அதைப் பார்த்தும், கேட்டும் நான் நெகிழ்ந்துவிட்டேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் அதுபற்றி ஆச்சரியப்பட்டு பேசினேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்றியதில் பெருமை. யாரையும் பார்த்து நாம் பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது மிகச்சிறியது. சினிமா வாழ்க்கை இன்னமும் சிறியது. அதில் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றிபெற வேண்டும். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் இருப்பது காதலா, வீரமா என்றார்கள். அது மணிரத்னத்தின் காதல். கல்கியின் மீது அவர் கொண்ட காதல். நானும் அவருக்கு காதலர்தான். காதலும், வீரமும் தமிழர்களின் பாரம்பரியம். அதை தாண்டித்தான் பக்தி மார்க்கம்.
இப்படத்தில் விக்ரம் நடிப்பு அருமை. ஐஸ்வர்யா ராய் மீண்டும் உலக அழகி என்பதை மணிரத்னம் நிரூபித்து விட்டார். எல்லோரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எப்படி எடுக்க முடியும் என்று கேட்டார்கள். இங்கு பேசிய அமைச்சர் துரைமுருகன் கூட அப்படி கேட்டதாக சொன்னார். ஆனால், மணிரத்னம் அதைச் செய்து காண்பித்துவிட்டார். படத்தின் நடிகர்கள் அதை மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றுவிட்டனர். சோழர்களின் காலம் மட்டும் பொற்காலம் அல்ல. இது தமிழ் சினிமாவின் பொற்காலம். இந்த மாதிரி யாரும் படம் எடுக்க மாட்டார்கள். காரணம், பயம். மணிரத்னத்துக்கும் அந்த பயம் இருந்திருக்கும். பயம் என்றால் என்ன தெரியுமா? பயம் இல்லாதது போல் நடிப்பதாகும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், குஷ்பு, ரேவதி, ஷோபனா, ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டனர்.