சென்னை: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ‘அங்கமாலி டைரிஸ்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி 18ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடந்தது.
இது சரித்திர கால படமாக பல மொழிகளில் அதிக பொருட்செலவில் உருவாகிறது. மோகன்லால், மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் கயிறு ஒன்றை மோகன்லால் இழுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருக்கு பின்புறம் நிலா இருப்பது போலவும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.