ஐதராபாத்: ஐதராபாத்தில் இரண்டாவதாக ரூ.8 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் நடிகை சமந்தா. சிட்டாடெல் இந்தி வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ள சமந்தா, குஷி தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இவருக்கு ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் ஒரு வீடு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் இந்த வீடு அமைந்திருக்கிறது. இந்நிலையில் இப்போது நனக்ராம்குடா என்ற பகுதியில் பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் 13வது மாடியில் வீடு வாங்கியுள்ளார் சமந்தா. இதன் மதிப்பு ரூ.8 கோடியாம். சமீபத்தில்தான் இந்த வீட்டை அவர் வாங்கியிருக்கிறார். இதற்கான இன்டிரியர் டிசைனிங் பணிகளை அவர் முடுக்கிவிட்டிருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு போல இந்தி படங்களிலும் சமந்தா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்தியில் நடிக்க வரும் முன்பே அவருக்கு தேசிய விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தனது சம்பளத்தையும் கணிசமாக சமந்தா உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் அமெரிக்காவிலுள்ள சினிமா தொடர்பு ஏஜென்ஸி ஒன்றிடம் சமந்தா பேசி வருகிறாராம்.
159