திருமலை: ஐதராபாத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத் மாதப்பூரில் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தும்மிடிகுண்டா ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஐதராபாத் நகரில் மழை காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் ஏரி, குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற முதல்வர் ரேவந்த்ரெட்டி அரசு முடிவு செய்தது.
இதற்காக அரசியல் தலையீடு இல்லாத வகையில் ஐபிஎஸ் அதிகாரி ரங்கநாதன் தலைமையில் ஹைட்ரா அமைப்பை உருவாக்கி உத்தரவிட்டார். இந்த அமைப்பினர் ஐதராபாத்தில் பல இடங்களில் நீர் ஆதார பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பல்வேறு கட்டிடங்களை கடந்த சில வாரங்களாக அகற்றி வருகின்றனர். அதன்படி இன்று ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நாகார்ஜூனாவிற்கு சொந்தமான மண்டபத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இடித்து அகற்றினர்.
மேலும் கட்டிடம் இடிக்கப்படுவதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் போட்டோ, வீடியோ எடுப்பதை போலீசார் தடுத்தனர். இதற்கிடையே, நாகார்ஜூனா தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதை கண்டித்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். எந்தவித முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்காமல் 200 பேர் கொண்ட போலீஸ் படை குவித்து சட்டவிரோத இடிக்கப்படுவதாக நாகார்ஜூனா தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் முன்வைத்தனர். இதனையடுத்து கட்டிடம் இடிப்பதை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் இடைக் கால உத்தரவு பிறப்பித்தது.