பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்து வந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே சூர்யாவுக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருமே பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டு பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து படத்தின் நாயகி கிரித்தி ஷெட்டியும் விலகி விட்டார். தற்போது சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யும், கிரித்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷ்னி பிரகாசும் நடித்து வருகிறார்கள். படத்தில் இருந்து விலகியது தொடர்பாக கிரித்தி ஷெட்டி தற்போது கூறியிருப்பதாவது: ‘வணங்கான்’ படத்தில் நடிக்க குறிப்பிட்ட தேதிகள் ஒதுக்கி கொடுத்தேன்.
ஆனால், படம் நின்று போனது. பிறகு அவர்கள் மீண்டும் கேட்ட தேதியில் நான் வேறு படங்களுக்கு தேதி கொடுத்து விட்டதால், என்னால் மீண்டும் ‘வணங்கான்’ படப்பிடிப்பில் இணைய முடியவில்லை. மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கிரித்தி ஷெட்டி ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் என்ற தெலுங்கு படங்களில் டப்பிங் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார். தற்போது ‘கஸ்டடி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் வருகிறார். அவர் நடித்த நேரடி தமிழ் படம் ‘வணங்கான்’’. அதிலிருந்தும் விலகி விட்டார்.