திருவனந்தபுரம்: ‘தற்போது நான் ஒரு சிங்கிள் மதர்’ என்று மலையாள நடிகை பாமா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கணவரை விவாகரத்து செய்திருப்பதால்தான் இவ்வாறு குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய ‘நிவேத்யம்’ என்ற படத்தில் அறிமுகமானவர், பாமா. பிறகு ‘சைக்கிள்’, ‘ஒன்வே டிக்கெட்’, ‘இவர் விவாகிதராயால்’, ‘ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘சேவற்கொடி’, ‘மதகஜராஜா’, ‘ராமானுஜன்’ ஆகிய படங்களிலும் மற்றும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
கடந்த 2020ல் தொழிலதிபர் அருண் என்பவரை திருமணம் செய்துகொண்ட பாமாவுக்கு கவுரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சமீபகாலமாக பாமா தன் கணவரின் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்த்து வந்தார். இதனால், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. இதை பாமா இதுவரை உறுதி செய்யாமல் இருந்தார். இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகளின் போட்டோவை வெளியிட்டு, ‘இனி நான் ஒரு சிங்கிள் மதர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘சிங்கிள் மதரான பிறகுதான் என்னுடைய வலிமை எனக்கே தெரிய வந்தது’ என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதனால், பாமா தனது கணவர் அருணை விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.