சென்னை: ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் வழங்க, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் நடித்துள்ள படங்கள், ‘விடுதலை’ முதல் மற்றும் 2வது பாகம். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். வரும் கோடை விடுமுறையில் ’விடுதலை-பார்ட் 2’ படம் திரைக்கு வருகிறது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘விடுதலை-பார்ட் 1’, ‘விடுதலை-பார்ட் 2’ ஆகிய படங்கள் வரும் 31, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், ‘லைம்லைட்’ பிரிவின் கீழ் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் வெற்றிமாறன், எல்ரெட் குமார், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.