சென்னை: இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜே.சபரிஸ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘பரமன்’ என்ற படம், விவசாயிகளின் வாழ்க்கையை மையப் படுத்தி உருவாகியுள்ளது. பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி, இதில் கதையின் நாயகன் பரமன் வேடத்தில் நடித்துள்ளார். வில்லனாக பழ.கருப்பையா, மிகவும் உருக்கமான கேரக்டரில் வையாபுரி நடித்துள்ளனர். ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது ஆகியோரும் நடித்துள்ளனர்.
சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, தமீம் அன்சாரி இசை அமைத்துள்ளார். இதய நிலவன் கதை எழுதியுள்ளார். மறைந்த விஜே மற்றும் நடிகைசித்ராவின் நடிப்பில் ஜே.சபரிஸ் இயக்கிய ‘கால்ஸ்’ என்ற படம், கடந்த கோவிட் காலக்கட்டத்தில் தியேட்டர்களில் வெளியானது. அதில், கால்சென்டரில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய ஜே.சபரிஸ், ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை சொல்லியிருக்கிறார். தேனியில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.