சென்னை: பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் ஆகியசிலருடன், மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் நடித்துள்ள படம், ‘தண்டட்டி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். இப்படம் ‘அண்டாவ காணோம்’ படத்தின் கதையை தழுவியது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இயக்குனர் ராம் சங்கையா அளித்த பேட்டி: ஒரு கிராமத்தில் தண்டட்டி அணிந்திருக்கும் பெண்மணியாக ரோகிணி எப்படி வாழ்ந்தார், அவர் இறந்த பிறகு தொலைந்த தண்டட்டியை கண்டுபிடிக்க வரும் ஹெட் கான்ஸ்டபிள் பசுபதி என்ன செய்கிறார் என்பது கதை. மதுரை வட்டாரவழக்கில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறேன். தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘அண்டாவ காணோம்’ படத்தின் கதையும், ‘தண்டட்டி’ கதையும் ஒரேமாதிரி இருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் புகார் சொன்னார். பிறகு அவர், ‘எங்கள் படம் வேறு. உங்கள் படம் வேறு’ என்றார். பிறகு திருப்பூரை சேர்ந்த ஒருவர், இது தனது புத்தகத்தில் உள்ள சிறுகதை என்று குற்றம் சாட்டினார். அவர் கடந்த ஆண்டு புத்தகத்தை வெளியிட்டார். 2019ம் ஆண்டே ‘தண்டட்டி’ கதையை நான் பதிவு செய்துவிட்டேன்.
56