சென்னை: திரிஷாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘லியோ’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் திரிஷா தற்போது முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் சோனி லிவ் ஓடிடியில் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு வெப் சீரிஸான இதனை சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ளார். தெலுங்கு தவிர்த்து, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தையை பலிகொடுக்கும் சம்பவத்துடன் டீசர் ஆரம்பிக்கிறது. இதில் பல்வேறு விஷயங்களை இயக்குனர் காட்சிப்படுத்தியுள்ளார். அதைப் பார்க்கும்போது, இது சமூக அவலங்களைப் பற்றி பேசும் திரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ளதாக தெரிகிறது.