சென்னை: ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி.குமாரதாஸ் தயாரித்துள்ள படம், ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இதை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். ஹீரோக்களாக விஜய் விஷ்வா, நலீம் ஜியா நடித்துள்ளனர். ஹீரோயினாக மஹானா சஞ்சீவி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஜான் விஜய், சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் நடித்துள்ளனர். பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி இசை அமைத்துள்ளனர். வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘இங்கு வந்த பிறகு, ‘கும்பாரி’ என்றால் நட்பு என்ற அர்த்தம் இருப்பது தெரியவந்தது. மற்ற எந்த உறவுகளும் பந்தத்துடன் தொடர்புகொண்டது. நட்பு மட்டுமே எந்த பந்தமும் இல்லாமல் வரக்கூடியது’ என்றார். விஜய் விஷ்வா பேசுகையில், ‘இப்படத்தின் கதை கடலும், கடல் சார்ந்தும் உருவாகியுள்ளது. 25 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். தற்போது ‘தரைப்படை’, ‘பிளாஷ்பேக்’, ‘பிரம்ம முகூர்த்தம்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். நிறைய புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால், இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.