ஐதராபாத்: படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கேலி, கிண்டலுக்கு ஆளானதால் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடிக்கும் படம் ஆதி புருஷ், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ராமாயணம் புராணத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர். பாலிவுட் டைரக்டர் ஓம் ராவத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் பாதி படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் அனுமான் வரும் காட்சிகள் உள்பட பல காட்சிகள் அனிமேஷனில் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அந்த கிராபிக்ஸ் காட்சிகள் கார்ட்டூன் படத்தை போல இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களில் ஆதிபுருஷ் டீசர், கேலி கிண்டலுக்கு ஆளானது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதே நிலையில் படத்தை ரிலீஸ் செய்தால், படுதோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியான பிறகு பட வியாபாரமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இதன் அனிமேஷன் காட்சிகளை மாற்றியமைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் சொல்லப்படுகிறது.
50