சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சான்றிதழ் காட்டச்சொல்லியும், தரக்குறைவாகப் பேசியும் அவமதித்தார்கள் என்று, நடிகை நமீதா புகார் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய எனது கணவருடன் சென்றேன். அங்கிருந்த அதிகாரிகள் சிலர், ‘நீங்கள் இந்து என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? முதலில் இந்து என்பதற்கான சான்றிதழைக் காட்டுங்கள்’ என்றார்கள்.
இது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இதுவரை எத்தனையோ கோயில்களுக்கு நான் சென்றிருக்கிறேன். யாரும் இதுபோல் கேட்டதில்லை. நான் பிறப்பால் இந்து பெண். எனது கணவரும் இந்துதான். எனது மகனுக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்திருக்கிறேன். இதையெல்லாம் நான் சொன்னபோது, என்னை தரக்குறைவாகப் பேசினார்கள். அசிங்கமாகப் பேசினார்கள். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை’’ என்று சொல்லிவிட்டு கண்கலங்கினார்.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது, இந்துவா என விசாரித்து அனுப்புவது வழக்கம். இந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல, வழக்கமான நடைமுறைப்படி தான் அவரிடம் கேட்கப்பட்டது. இதன்பின்னர் அவர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்’’ என தெரிவித்துள்ளனர்.